இலங்கையில் 3000-க்கும் மேற்பட்டோர் இணைய ஊடுருவல்!

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கணினி மற்றும் கைத்தொலைபேசி ஊடுருவல் மோசடிகளில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கணினி அறிவு மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு குறைவாக உள்ளவர்களே இவ்வாறான மோசடிக்காரர்களின் பிரதான இலக்காக மாறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோசடிக்காரர்கள் தனிநபர்களின் வட்ஸ்அப் கணக்குகளை சட்டவிரோதமான முறையில் ஊடுருவி, அதன் பின்னர் அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவசர பணத் தேவை இருப்பதாகக் கூறி போலியான செய்திகளை அனுப்புகின்றனர். இதனை உண்மை என நம்பும் நண்பர்கள், மோசடிக்காரர்கள் வழங்கும் வங்கி கணக்குகளுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்களை வைப்பிலிடுகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உயர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட பல சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தற்போதைய அபாயகரமான சூழலைக் கருத்திற்கொண்டு காவல்துறை தலைமையகம் பொதுமக்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

கைத்தொலைபேசிகளுக்குத் திடீரென வரும் தெரியாத இணையதள இணைப்புகள் அல்லது கோப்புகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யவோ, திறக்கவோ வேண்டாம்.

உங்கள் நண்பர் அல்லது உறவினரின் வட்ஸ்அப் கணக்கிலிருந்து அவசரமாகப் பணம் கோரி செய்தி வந்தால், உடனடியாகப் பணத்தை அனுப்ப வேண்டாம். முதலில் அந்த நபரைத் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்தான் அந்தச் செய்தியை அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வட்ஸ்அப் கணக்கைப் பாதுகாக்க அதன் ‘செட்டிங்ஸ்’ பகுதிக்குச் சென்று ‘Two-Step Verification’ முறையைச் செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

தனிப்பட்ட தகவல்களையும் வங்கி விபரங்களையும் பகிரும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.