நூருல் ஹுதா உமர்
மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான புதுமுக மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் ‘Embark 2026’ நிகழ்வு ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் பி.எம். அல் நஹ்தி மற்றும் செயலாளர் எம்.ஏ.எம்.சியாம் தலைமையில், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர், வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷஸ்லி ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிராஅத் மற்றும் தலைமை உரையுடன் தொடங்கிய நிகழ்வில், பேராசிரியர் எம்.எம்.பாஸில் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் உரையாற்றினார். “நீங்கள் நாளைய தலைவர்கள்; உங்களுக்கு வானமே எல்லை” என அவர் வலியுறுத்தியதுடன், மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக வாழ்க்கையை பயனுள்ளதாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் உரையாற்றிய டொக்டர் ஷஸ்லி ஹமீத், பல்கலைக்கழக வாழ்க்கையின் முக்கியத்துவம், அனுபவங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளை அடையும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுடன் மனம்விட்டு பகிர்ந்துகொண்டார். அவரது உரை மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.
மேலும், 2025 ஆம் ஆண்டு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் கௌரவச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் வரலாறு, பணிகள் மற்றும் நோக்கங்கள் குறித்து முன்னாள் உறுப்பினர்கள் விளக்கமளித்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு குழுவாகவும் தனிப்பட்ட முறையிலும் பதிலளிக்கப்பட்டது.


