இலங்கையின் வரலாற்றில் மற்றுமொரு மிகக் கொடூரமான நாளாக நினைவுகூரப்படும் தினம் இன்றாகும்.
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தன.
இந்த தாக்குதல்கள் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டன.
ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்தனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு பின்னர், தீவிரவாத குழுவாக கருதப்படும் உள்ளூர் அமைப்பு மற்றும் சர்வதேச தீவிரவாத இணைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அப்பாவி இறை விசுவாசிகளின் நீதிக்கான போராட்டம் 07 ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காலை 8:45 மணிக்கு இரண்டு நிமிட மௌனம் கடைப்பிடித்து, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட ஆராதனைகளின் பிரதான நிகழ்வு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 07 மணி முதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை குறித்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு தேவாலயத்தைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


