விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று (20) விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நேரில் முன்னிலையாகுமாறு விஜய்க்கு ஏற்கனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று இரு தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பரஸ்பரம் பேசி, சுமூகமாகப் பிரிந்து விடுவது எனத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், வாழ்நாள் ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாலும், பாதுகாப்பு காரணங்களினாலும் விஜய்யும் சங்கீதாவும் நேரில் முன்னிலையாவதற்குப் பதிலாக, காணொளி காட்சி (Video Conferencing) வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பரஸ்பர ஒப்புதல் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் இருவரும் காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.