12 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டிய, கடற்றொழில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தினார்.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகை தந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை காரைநகர் கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது, விசைப்படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இவர்கள் யாழ்ப்பாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டதாக 20 படகுகளுடன் 141 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.