த.சுபேசன்
பெண்களினுடைய தேசியம் மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பூநகரிப் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும்,முன்னாள் போராளியும், செயற்பாட்டாளருமான தயானந்தன் ஜெயச்சித்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த 07ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன்.
அங்கு நான்கு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
இது மாத்திரமல்ல மூன்று தடவைக்கு அதிகமாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கும் அதேநேரம் பலதடவைகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.
இவ்வாறான செயற்பாடுகள் பெண்களினுடைய தேசிய அரசியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைகின்றது.
தொடர்ச்சியான சமூக செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மத்தியில் அச்ச நிலைமை காணப்படுகின்றது.
பெண்கள் அரசியலை விட்டு தள்ளி இருக்கும் நிலைமை ஏற்படுத்தப்படுவதாக மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


