விளையாட்டுப் பொருட்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்!

கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான புதிய உத்தியைக் கண்டறிந்துள்ளதை அடுத்து, காவல்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கமான பாதுகாப்பு சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சாதாரணமான மற்றும் பாதிப்பில்லாத பொருட்களைப் பயன்படுத்தி இவ்வாறு போதைப்பொருட்களை மறைத்துக் கடத்தும் முறை கையாளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கல்முனை, மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் இயங்கி வரும் பாரியளவிலான போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், அம்பாறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த நூதன உத்தி குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கல்முனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து 107 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

குறித்த பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரியங்கர நிலதாரி தலைமையிலான குழுவினர், பிரதம காவல்துறை பரிசோதகர் சதாரசிங்கவின் அறிவுறுத்தலின் கீழ் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

இந்தச் சோதனையின் போது, உயர் தரத்திலான போதைப்பொருட்கள் மிகவும் கவனமாகச் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 39,620 ரூபாய் பணம், பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மின்னணு தராசு மற்றும் இரண்டு கைபேசிகளையும் காவல்துறை பறிமுதல் செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.