எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரண்டாவது பிலிக்ஸ் கடினப்பத்து வெற்றிக் கிண்ண நிகழ்விற்கான ஊடக சந்திப்பு கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் உள்ளக மண்டபத்தில் நேற்று (07) இடம் பெற்றது.
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது சேவையாற்றிய தவராசா பிலிக்ஸ் அவர்களின் நினைவாக கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் பிலிக்ஸ் சவால் கிண்ணத்திற்கான (Felix challnge trophy 2nd Season) ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
பிலிக்ஸ் சவால் கிண்ண போட்டிகள் 1986 ஆண்டு மென்பந்து போட்டிகளாக இடம் பெற்ற போதிலும் கடந்த வருடத்திலிருந்து கடினபந்து போட்டிகளாக இடம் பெற்று வருகின்றது.
இதன் போது பிலிக்ஸ் சவால் கிண்ண போட்டிகளுக்காக இம்முறை மாவட்டத்தின் பிரபல்யமான ஏழு கழகங்களைச் சேர்ந்த திறமையான வீரர்கள் தமது பலத்தினை வெளிக்காட்டவுள்ளதுடன்
போட்டிகளில் விளையாடவுள்ள அணித்தலைவர்கள் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டனர்.
வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் இப்
பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக் கழக பணிப்பாளர் எஸ்.ரஞ்சன், செயலாளர் ரீ. மதிராஜ்,
காலம் சென்ற சிரேஸ்ட உறுப்பினர் பிலிக்ஸ் அவர்களின் சகோதரர் கண்ணா மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் பிலிக்ஸ் சவால் கிண்ண போட்டியில் ஏறாவூர் வை.எச்.எஸ்.சி சம்பியன் அணியினர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


