இந்தியாவின் லக்னோவில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி துண்டு தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு வன்முறையாக மாறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சண்டையில் வாடிக்கையாளர் ஒருவரும், அவருக்கு உதவ முயன்ற சட்டத்தரணி ஒருவரும் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லக்னோவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், தமக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் இறைச்சி துண்டு இல்லை என்று கூறி அதை மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது.
உணவக உரிமையாளரும் அங்கிருந்த சுமார் 10 முதல் 12 ஊழியர்கள் இணைந்து அந்த வாடிக்கையாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த சட்டத்தரணி ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


