பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை மறுப்பு தடை – அமைச்சர் அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசச் செயலாளரகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதது பெற்றோரின் தவறாக இருந்தாலும், அதனை காரணமாகக் கொண்டு அதிகாரிகள் செயலிழந்து நிற்க முடியாது என அமைச்சர் வலியுறுத்தினார். பதிவுத் திணைக்களம் மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் வரை, அத்தகைய அனைத்து பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கமைய, பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்படக்கூடாது என அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் சேர்க்கையில், தேவையான ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து தகுதியான பிள்ளைகளும் வகுப்பறைகளில் இருக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்வி கற்கும் உரிமைக்கு பிறப்புச் சான்றிதழ் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும், ஏற்கனவே மூன்று மாதங்கள் தாமதமான நிலையில், ஒவ்வொரு வலயத்திலும் உள்ள தகுதியான பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.