ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் இடம்பெற்ற மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் தலைமையகப் பொலிஸாரின் தகவலின்படி, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புடையவர் எனவும் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் ஆரம்பத்தில் பாடசாலை மட்டத்தில் சமரசம் செய்யப்பட்டிருந்தபோதிலும், தாக்குதல் இடம்பெற்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மாணவர்களும், பழைய மாணவரும் கைது செய்யப்பட்டனர்.
காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


