குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை!

.உள்நாட்டு உற்பத்தித் துறையை பாதுகாக்கும் நோக்கில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கான விசேட கள விஜயத்தின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலையை விட குறைந்த விலையில் அதே வகை இறக்குமதி பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், அவற்றை உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்யுமாறு உற்பத்தியாளர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பாதணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் உள்ளிட்ட சில பொருட்கள், விதிக்கப்பட்ட வரிகளுக்கு கீழான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இவை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வகையான முறைகேடுகளை கண்டறிந்து உரிய முறையில் முறைப்பாடு செய்வது உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும் என்றும், இதனை அரசாங்கம் மட்டுமே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதனால், உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்க உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.