மட்டக்களப்பு – ஏறாவூரில் கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்க அலுவலகம் திறந்து வைப்பு!

(ஏறாவூர் நிருபர்) கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் அலுவலகம் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் சம்பிரதாயபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் திருகோணமலை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விசேடமாக சங்கத்தின் செயற்பாடுகளை இலத்திரனியல் மயப்படுத்தி அங்கத்தவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்த இங்கு தீர்மானிக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் முஸம்மில் அபுசாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உப தலைவர் எஸ். தாசன், செயலாளர் என். விமல் காந்த், உப செயலாளர் ஈ. அன்ரணி தாஸ், பொருளாளர் எம்.யூஎம். சபீக் மற்றும் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு நடைபெற்ற நிருவாகக்குழுக் கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள், சேவைப் பிரமாணக் குறிப்பினை மீளமைத்தல் , அலுவலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சம்பள அளவுத்திட்ட மேம்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.