அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை (Road Passenger Transport Authority – RPTA) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.
இதனைப் பின்பற்றத் தவறும் பேருந்துகளுக்கு எதிராகப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
நிபந்தனைகளை மீறும் பேருந்துகளைக் கண்டறியும் நோக்கில் போக்குவரத்து அதிகாரிகளினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பேருந்துகள் அல்லது கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்தாத பேருந்துகள் குறித்து பொதுமக்கள் கீழ்க்காணும் இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி: 011 2860860
வட்ஸ்அப்: 070 2860860
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC):
அவசர இலக்கம்: 1955
வட்ஸ்அப்: 071 2595555
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குறைந்தபட்ச கட்டணம்: ரூபா 30.00 (முன்னர் ரூபா 27.00)
அதிகபட்ச கட்டணம்: ரூபா 2,422.00 (ரூபா 263.00 அதிகரிப்பு)
அதிகரித்த கட்டணத்தை விட மேலதிகமாகப் பணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகத் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.


