( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடாத்தியதில் அங்கு மயக்க மருந்து போத்தல்கள் மற்றும் குளிசைகளையும் பொலிசார் மீட்டெடுத்தனர் .
கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான விசேட போலீஸ் குழுவினர், கொக்கட்டிச்சோலை போலீஸ் நிலையத்திலிருந்து, நேற்று நள்ளிரவு சந்தேகநபர் இருவரையும் , அவர்களது காஞ்சிரன்குடா இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த மயக்கமருந்து போத்தல்களையும் குளிசைகளையும் மீட்டெடுத்தனர் .
அத்துடன் இந்த மயக்கமருந்து இன்னுமொரு ஆட்டோ சாரதிக்கும் வழங்கியதாக சந்தேகநபர்கள் குறிப்பிட்டனர் . அதனையடுத்து கொக்கட்டிச்சோலையிலுள்ள குறித்த ஆட்டோ சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .
குறித்த மயக்க மருந்து எங்கிருந்து பெறப்பட்டது என்பது தொடர்பாக பொலிசார் திவீரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந் நிலையில் மேலும் சிலர் சிக்கலாம் என தெரிகிறது.
இன்று வெள்ளிக்கிழமை அனைத்து ஐந்து சந்தேக நபர்களும் நீதிமன்றங்களுக்கு ஆஜர் செய்யப்பட்டனர்.
இதேவேளை கிணற்றிலிருந்து உயிரோடு மீட்ட தாயும் பிள்ளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல்நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் .
இதேவேளை, சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


