சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, மணல்காடு பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மணல்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது, காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவர் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் இது தொடர்பான சத்தியக்கடதாசிகள் கோரப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் அன்றைய தினம் கடமையில் இருந்தனரா அல்லது விடுமுறையில் இருந்தனரா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான உள்ளக விசாரணைகளைக் காவல்துறையினர் முறையாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நேரில் விளக்கம் கோருவதற்காக, பிராந்தியத்திற்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரியை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக த.கனகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.