அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்களன்று (23) மாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
இதனால், குறித்த ஆலை தீப்பிடித்து எரிந்து கருப்பு புகைகளை பிரமாண்டமாக வான் நோக்கி எழுப்பியதாக கூறப்படுகிறது.
வலேரோவின் போர்ட் ஆர்தர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தைக் கருத்தில் கொண்டு, டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்தனர்.
சுத்திகரிப்பு ஆலையில் உள்ள வெப்பமூட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறுடன் இந்த வெடிப்பு தொடர்புடையதாக இருக்கலாம் என்று சடட அமுலக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியான புகை வானத்தை மூடியதால், அதிகாரிகள் நாள் முழுவதும் அப்பகுதியின் காற்றின் தரத்தைக் கண்காணித்தனர்.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சுத்திகரிப்பு ஆலையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
வலேரோ போர்ட் ஆர்தர் சுத்திகரிப்பு ஆலை, டெக்சாஸ் வளைகுடாக் கடற்கரைக்கு அருகிலும், டெக்சாஸ்-லூசியானா எல்லையிலும் அமைந்துள்ளது.
இந்த ஆலையில் சுமார் 770 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
மேலும், இது தினமும் 435,000 பீப்பாய்களுக்கும் அதிகமான பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை உற்பத்தி செய்கிறது.


