திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு இளைஞன் மேற்கொண்ட கொடூர செயல்!

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் மீது எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தனது ரத்தத்தையே ஊசி மூலம் செலுத்திய கொடூரச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத் அருகே உள்ள போச்சாரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும், அவரது உறவினரான வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அந்த இளைஞருக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார் திருமணத்தை ரத்து செய்தனர்.

திருமணம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அந்தப் பெண்ணை பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

மார்ச் மாதம் 11 திகதி அன்று அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்த அவர், மீண்டும் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டுள்ளார்.

பெண் மறுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த எச்.ஐ.வி தொற்றுள்ள தனது ரத்தத்தை ஊசி மூலம் அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்தியுள்ளார்.

பயத்தின் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்த அந்தப் பெண்ணுக்கு, இரண்டு நாட்களுக்குப் பிறகு சுகயீனம் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதித்தபோது மருத்துவர்களிடம் அவர் உண்மையைக்கூறவே, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போச்சாரம் காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதற்கட்டப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு தொற்று இல்லை என்று வந்தாலும், வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய மேலும் சில மாதங்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“யாரும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது, அதன் பிறகு நானே திருமணம் செய்து கொள்ளலாம்” என்ற வக்கிர புத்தியிலேயே அந்த இளைஞர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.