விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் எச்சரிக்கை!

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதன்படி புதன்கிழமை போன்ற பொது விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படும் போது, அவர்களுக்குரிய விடுமுறை கொடுப்பனவு முறையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும் ஏனைய தனியார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீட்டை சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது முறையற்றது.

தடையில்லா சேவையை உறுதிப்படுத்த சுகாதாரத் துறைக்கு என பிரத்தியேக எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய துறைகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு, சுகாதாரத் துறையினரை மட்டும் வழமை போல் பணியாற்றுமாறு கோருவது முரணானது.

மேலும் நோயாளர்களுக்கு விடுமுறை நாட்களில் சிகிச்சை தேவைப்படாது என அதிகாரிகள் கருதுகிறார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் உரிய அதிகாரிகளின் தலையீட்டுடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கூடுதல் பலன்கள் இன்றி ஊழியர்களை விடுமுறை நாட்களில் பணியாற்ற வைத்தால், அதன் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.