ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா சதி!

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய ஆளில்லா வானூர்திகளை போன்ற போலி வானூர்திகளை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நடத்தியதாகக் காட்டும் நோக்கில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானியத் தயாரிப்பான ‘ஷாஹெட்’ (Shahed) ஆளில்லா வானூர்திகளை பிரதிபலிக்கும் ‘லூகாஸ்’ (Lucas) ரக வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

துருக்கி, குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் சமீப நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இவ்வாறான போலியான ஆளில்லா வானூர்திகள் மூலமே நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கப்படுவதாகவும், ஈரானிய இராணுவ தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.