அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழிகாட்டும் “Future Leaders” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட “Islamic Life Studies” 7 நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை நிலையத்தில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (09) புல்மோட்டை அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் , முன்னாள் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ரிஷான் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான Dr. ஹில்மி முஹைதீன் பாவா, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, கிண்ணியா நகரசபை உபதவிசாளர் அஸீஸ் அதிபர், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் கட்சியின் குச்சவெளி பிரதேசசபை, கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டக் குழு செயலாளர் அனீஸ், கட்சியின் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ரமலான் காலத்தில் இளைஞர்களின் இஸ்லாமிய நெறி, சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம், சுமார் 1000 மாணவர்களுக்கு பயனடைந்துள்ளதுடன். 20க்கும் மேற்பட்ட நிலையங்களில், 35க்கும் மேற்பட்ட திறமையான வளவாளர்களின் பங்களிப்புடன், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இப்பயிற்சி திட்டம், கட்சியின் கல்விப்பிரிவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


