அம்பாறை கரையோரம் இனி ‘காபட்’ மயம்! மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 KM காபட் வீதிகளை அமைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 50 KM காபட் வீதிகளை அமைப்பதே எமது இலக்காகும். இதில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10 KM வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளையே ஆரம்பிக்க முடிந்தது. எஞ்சியுள்ள 40 KM வீதிகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அட்டாளைச்சேனை RDS வீதி, சாய்ந்தமருது கல்யாண வீதி, நிந்தவூர் இமாம் றூமி வீதி மற்றும் மருதமுனை பள்ளிவாசல் முன் வீதி ஆகியவற்றின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் காணப்படும் ஏனைய முக்கிய தடைகளையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தின் அபிவிருத்திக்காகத் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தொடர்ந்து கிட்டங்கிப் பாலத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிர்வாக மற்றும் பொருளாதார நிலை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய சூழலில் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால் தாமாகவே முன்வந்து வரி செலுத்துகின்றனர். இதனால் வரி வருமானம் அதிகரித்துள்ளதுடன், திறைசேரியில் போதியளவு நிதி சேமிப்பும் காணப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் நாடு பாரிய சேதங்களை எதிர்கொண்ட போதிலும், முறையான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை, எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.