நூருல் ஹுதா உமர்
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பிரிவு (12) நூலகத்தின் மேல்தளத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமெரிக்கா–இலங்கை Fulbright ஆணையத்தின் பிரதிநிதி கலாநிதி பட்ரிக் மெக்னமாரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய பிரிவை திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி பட்ரிக் மெக்னமாரா, ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தை அதன் நூலகத்தின் தரம் மூலம் அறிய முடியும் எனக் குறிப்பிட்டார். நூலகம் என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் “இதயம்” எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் Library of Congress உலகின் மிகப்பெரிய நூலகமாக விளங்குவதுடன், அதன் நூலக வகைப்பாடு மற்றும் பட்டியலிடும் முறை உலகின் பல நூலகங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், Library of Congress-இல் பணிபுரியும் ஒரு நூலக நிபுணர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்து நூலக முகாமைத்துவம் மற்றும் சர்வதேச கல்வி வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்கம் அல்லது பயிற்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன், இன்றைய காலகட்டத்தில் நூலகம் என்பது புத்தகங்களை சேமித்து வைக்கும் இடமாக மட்டுமல்லாது, உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்புகளை உருவாக்கும் முக்கிய தளமாக மாறிவருவதாகக் குறிப்பிட்டார். புதிய Fulbright Section மூலம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் சர்வதேச கல்வி, ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய Fulbright Section மூலம் Fulbright புலமைப்பரிசில் திட்டங்கள், சர்வதேச கல்வி பரிமாற்ற வாய்ப்புகள், வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கும் வழிமுறைகள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் GRE மற்றும் TOEFL போன்ற தேர்வுகளுக்கான தயாரிப்பு வளங்கள், வெளிநாடுகளில் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், கல்வி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல் வளங்களும் இந்த பிரிவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சி மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உலகளாவிய கல்வி வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்துவதற்கான புதிய வாயிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் EducationUSA ஆலோசகர் ஈசா ஸ்போரி, Fulbright விசேட திட்டத்தின் கீழ் வருகை தந்த கலாநிதி ரொபர்ட் டிபினிஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல்.எம். சஜீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நூலக ஊழியர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.


