மட்டக்களப்பு நகர் தேசிய அழகுபடுத்தல் செயற்திட்டத்தில் தெரிவு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசிய ரீதியில் 10 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் பங்குபற்றுதலுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எல்.ஜெ. லியனகே அவர்களும் இதில் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் செயற்திட்டம் தொடர்பான இந்த கலந்துரையாடல் நேற்று முன் தினம்(10) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நகர அழகுபடுத்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநிதன், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி பணிப்பாளர்கள், கலாநிதி கே. பிரேமகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.