பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட “புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் தடுப்பு” (Cancer Early Detection & Prevention Programme) விழிப்புணர்வு செயலமர்வு இன்று (11) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மூன்று முக்கிய தலைப்புகளில் வளவாளர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
கல்முனை பிராந்திய தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாத் புற்றுநோய் அறிமுகமும் அதற்குரிய ஆபத்து காரணிகள் குறித்தும் விளக்கமளித்தார். அதனைத்தொடர்ந்து பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் யூ. ஹபீப் முஹம்மட், வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் வாய்ப்புற்றுநோய் குறித்து விளக்கமளித்தார். இறுதியாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பாத்திமா ஷாபிரா முகம்மட் வாசீம், மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியும் விளக்கமளித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.கரண், மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ.அஹமட் அஷ்ஹர், சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மாகாணம் முழுவதும் புற்றுநோய் தொடர்பான 100 விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தும் விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது. அவ்விழிப்புணர்வுத் திட்டத்தின் 3வது நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






