போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணியும் மகளீர் தின நிகழ்வும் கட்டட திறப்புவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கேப்பாப்புலவு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது.
கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி சி.பிரசன்னா தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணியில் வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், நிறுத்து நிறுத்து மதுவை நிறுத்து எனும் கோசங்களுடன் பேரணி நடைபெற்றது.
பேரணியை தொடர்ந்து மகளீர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன பிரதவிருந்தினரினரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணையில் நிர்மானிக்கப்பட்ட கட்டடமானது அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.தயந்த பெனான்டோ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து மகளீர் தினத்தை முன்னிட்ட முதியவர்கள், மாகாண மற்றும் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற பெண் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகிய பெண் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பெரண்டினா நிறுவன உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் குறித்த நிகழ்விற்கு பெரண்டின நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நடைபெற்ற கண்டனப் பேரணியின் நோக்கமானது எமது பகுதியில் மது பாவனையானது மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும், இதனை கிராமத்தில் உள்ள எந்த அமைப்புக்களாலும் திருத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கடந்த காலப்பகுதியில் குடியமர்த்தப்பட்ட வீடுகளில் கசிப்பு காணப்பட்டதாக பொலிசாரிடம் முறையிட்டதாகவும் குறித்த கசிப்புடன் தொடர்புடயவர்களிடம் இத் தகவலை மாதர்சங்கத்தில் இருப்பவர்கள் தந்தாக குறிப்பிட்டிருந்தனர்.
அதனால் தமக்கு பாதுகாப்பு பிரச்சனையாக உள்ளதாகவும் எமது கிராமத்தில் மது ஒழிய வேண்டும் எனவும் சிறுவர்கள் மது பாவிப்பதாக தமக்கு தகவல்கள் கிடைப்பதாகவும் அதிகமான குடும்பங்கள் இந்த மதுவால் சீரழிவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இக் கிராமத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கும் மது காரணம் என தெரிவித்ததுடன் குறித்த காரணங்களுக்காகவே கண்டனப் பேரணி நடாத்தியதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இதனை உரிய அதிகாரிகள் கருத்தில்கொண்டு விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் எனவும் மது ஒழிப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


