( வி.ரி.சகாதேவராஜா)
“ஒளிரும் கரங்கள்” Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது .
ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட தேவையுள்ள பிள்ளை நல அமைப்பின்(Disabled child care) தலைவருமான ரி. இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பணிப்பாளர் மொகான் அபேசுந்தர, மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் மதகுருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
தற்போது இப் பயிற்சி நிலையத்தில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் இருந்து 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு கைத்தறி பயிற்சி, அலைபேசி திருத்தம் பயிற்சி , சிரட்டை அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சி போன்ற பயிற்சி நெறிகள் கொடுப்பனவுடன் வழங்கப்பட இருக்கின்றன.
இவர்களுக்கு நய்ட்டா ( NAITA) நிறுவனம் மாதா மாதம் ஒவ்வொரு பயிலுனருக்கும் 7500 ரூபாவை நன்கொடையாக வழங்குகின்றது.
இவர்களுக்கு இதேபோன்று மேலும் பல உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெற மேலும் மாற்றுத் திறனாளிகளை ஒளிரும் கரங்கள் அமைப்பு எதிர்பார்க்கின்றது.
கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டெப்லிங் ( Deaflink)ஸ்தாபகர் வண.ஜி.ஜி.ஞானராஜா, மட்டக்களப்பு லடர் ஆப் ஹோப் ( Ladder of hope) பொதுமுகாமையாளர் செல்வி எஸ் .ஆர். மதிதரன் ஆகியோர் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்கள்.


