சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

சட்டமூலத்துக்கு எதிராக 307 வாக்குகளும், ஆதரவாக 173 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் பாடசாலைகள் சட்டமூலம் சட்டமாக மாறிய 12 மாதங்களுக்குள் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையினை கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் லார்ட் நாஷ் கடந்த வாரம் முன்வைத்தார்.

சட்டமூலம் பிரபுக்கள் சபையால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் திங்கட்கிழமை (10) இரவு பொதுமக்கள் சபையினால் 134 பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையினை அமுல்படுத்தி உலகின் முதல் நாடாக மாறிய பின்னர் இந்த தடைக்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன.

அப்போதிருந்து, ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகள் இந்த யோசனையை பரிசீலித்து வருகிறது.