சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுமுல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் பெண் சாதனையாளர்களுக்கு *“அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்
2026 மார்ச் 8, உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளைப் பாராட்டவும், பாலின சமத்துவத்தை அடைவதற்காக இன்னும் நிலவும் சவால்களை முன்னிறுத்தவும் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச மகளிர் தினமாகக் குறிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் 1977ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அங்கத்துவ நாடுகளாலும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருப்பொருள்
*“Rights. Justice. Action. For ALL Women and Girls”*
*(அனைத்து பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் உரிமைகள், நீதி, செயல்)*
என்பதாகும். இது வெறும் குறியீட்டு அங்கீகாரத்தைத் தாண்டி, சம ஊதியம், பெண்களுக்கான வலுவான சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட அமைப்புசார் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதைக் கோருகிறது.
இலங்கையில் *“The Pride of a Prosperous Country – She is the Nation’s Path Forward”*
*(“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”)*
என்ற கருப்பொருளின் கீழ் தேசிய அளவில் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
*ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய இலக்குகளில் ஒன்றான பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தல்* என்ற இலக்கினை முல்லைத்தீவு மாவட்டத்தில் செயல்திறனுடன் முன்னெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு முதல் *“அரியாத்தை விருது”* வழங்கும் திட்டம் மாவட்டச் செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
வன்னி மண்ணின் வரலாறு பண்டாரவன்னியனின் வீர வரலாற்றின் மூலம் உலகிற்கு அறியப்பட்டது. அதேபோல், இந்த மண்ணின் பெண்களும் உலகின் ஏனைய வரலாற்று நாயகிகளுக்கு எந்த வகையிலும் குறைவானவர்கள் அல்ல என்பதை *“ஆனைகட்டிய அரியாத்தை”* என அழைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை கிராமத்தைச் சேர்ந்த வீரப்பெண் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
அந்த வீரப்பெண்மணியின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களுக்கு “அரியாத்தை விருது” இவ்வாண்டு இரண்டாவது தடவையாக வழங்கப்பட உள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் பெண் சாதனையாளர்களுக்கான “அரியாத்தை விருது” பெற தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு:
*1. ஆண்டின் சிறந்த பெண் தலைமைத்துவ விருது (Woman Leader of the Year Award)*
சமூக சேவைகளிலும் பெண்கள் முன்னேற்றத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, மாதர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வழியாக பெண்களை ஒருங்கிணைத்து சுயஉதவி குழுக்கள் உருவாக்கம், சேமிப்பு பழக்க வளர்ச்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்து, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வரும்
முல்லைத்தீவு மாவட்டம் *மாந்தை கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி சிறீதரன் இராஜேஸ்வரி* அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் *ஆண்டின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான “அரியாத்தை விருது* ” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
*2. ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது (Woman Entrepreneur of the Year Award)*
நிறைந்த போட்டியும் சந்தைப்படுத்தல் சவால்களையும் தைரியமாக எதிர்கொண்டு தொழில் முயற்சியாண்மையில் வெற்றிப் பயணம் மேற்கொண்டு, தாயார் ஆரம்பித்த சுயதொழிலை தொடர்ந்து முன்னேற்றி தரமான உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தனது பிரதான நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும்
முல்லைத்தீவு மாவட்டம் *கரைத்துறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ஜெனிபன் மேனகா* அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் *ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோரிற்கான “அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
*3. ஆண்டின் சிறந்த பெண் சமூக சேவகர் விருது (Woman Social Worker of the Year Award)*
சமூக முன்னேற்றத்திற்கும் மகளிர் அதிகாரமளிப்பிற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சமூகத் தலைவராக பல்வேறு சமூக, மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புகளில் நிர்வாக உறுப்பினர், தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றி சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்து சமூக சேவையில் முன்னுதாரணமாக விளங்கி வரும்
முல்லைத்தீவு மாவட்டம் *புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி சுந்தரலிங்கம் கலைச்செல்வி* அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் *ஆண்டின் சிறந்த பெண் சமூக சேவகரிற்கான “அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
*4. ஆண்டின் சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவர் விருது (Woman Changemaker of the Year Award)*
சவால்களை தாண்டி தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ்க்கையில் முன்னேறி, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகக் கருதப்படும் கட்டிடப் பொருட்கள் போக்குவரத்து தொழிலில் தன்னுடைய முயற்சியால் வெற்றி பெற்றதன் மூலம் பெண்களும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள
முல்லைத்தீவு மாவட்டம் *வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி டி.எம். ஸ்ரியானி விஜேலதா* அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் *ஆண்டின் சிறந்த பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவரிற்கான “அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
*5. ஆண்டின் சிறந்த பெண் சாதனையாளர் விருது (Woman Achiever of the Year Award)*
விளையாட்டுத் துறையில் பெண்களின் திறமையும் பங்களிப்பும் உயர்ந்து விளங்கும் வகையில் சர்வதேச ரீதியில் குத்துச்சண்டை (Boxing) விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சிறப்பான சாதனை படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள
முல்லைத்தீவு மாவட்டம் *ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி பிரபாகரன் இந்துகா தேவி* அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் *ஆண்டின் சிறந்த பெண் சாதனையாளரிற்கான “அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
*6. ஆண்டின் சிறந்த இளம் பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவர் விருது (Young Woman Changemaker of the Year Award)*
இளம் வயதுடையவராக இருந்தாலும் பொதுவாக ஆண்கள் அதிகமாக ஈடுபடும் விவசாய இயந்திரங்களை திறம்பட இயக்கி சமூகத்தில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கி விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தன்னம்பிக்கையுடனும் உறுதியான உழைப்புடனும் செயல்பட்டு பெண்களும் எந்தத் துறையிலும் முன்னேற முடியும் என்பதை செயல்முறையாக நிரூபித்து வரும்
முல்லைத்தீவு மாவட்டம் *துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி வசந்தகுமார் பபிஞ்சுதா* அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் *ஆண்டின் சிறந்த இளம் பெண் மாற்றத்தை ஏற்படுத்துபவரிற்கான “அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட “அரியாத்தை விருதுகள்” முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் இம்மாத இறுதியில் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது







