உலகில் வேகமாக எழுதக் கூடிய குழந்தை மட்டக்களப்பில்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

உலகில் வேகமாக எழுதக் கூடிய குழந்தை என்ற பட்டத்தை பெற்று மட்டக்களப்பை சேர்ந்த நான்கு வயதான அப்டியல் ரயன் விக்டர் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசித்து வரும் செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் ஆகியோரின் நான்கு வயதான மகன் அப்டியல் ரயன் விக்டர். இவர் தனது தாயின் உதவியுடன் மூன்று வயதிலையே வாசிக்கும் பழக்கத்தையும் எழுதும் பழக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

நாளடைவில் எழுதுவதில் இவருடைய வேகத்தைக் கவனித்த இவருடைய தாய் இவருடைய இந்தத் திறமையை உலக சாதனையாகப் பதிவு செய்ய முடிவெடுத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.

இக் குழந்தை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள திரு இருதயநாதர் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த.இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சிவ வரதகரன், செயலாளர் சோலையூரான் ஆ.தனுஸ்கரன், மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ.தனுராஜ் போன்றோர் முன்னிலையில் குழந்தை ரயன் விக்டர் உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்த முயற்சியின் போது 3 மற்றும் 4 எழுத்துகள் கொண்ட 200 ஆங்கிலச் சொற்களை 8 நிமிடங்களில் அவர் எழுதியுள்ளார். அனைத்தையும் முறைப்படி ஆய்வு செய்த நடுவர்கள் குழு, இந்த முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்தது.

சோழன் உலக சாதனை படைத்த குழந்தைக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாளச் சின்னம், அடையாள அட்டை மற்றும் கோவை போன்றவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளார்கள்.

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தாண்டவன்வெளி
புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை ரி.ஏ.யூலியன் அவர்கள் பங்கு கொண்ட அதேவேளை,
சிறப்பு விருந்தினர்களாக புனித மிக்கேல் கல்லூரியின் துணைத் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பா.செல்வராஜ் போன்றோர் உலக சாதனை படைத்த மாணவனை வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.
கௌரவ விருந்தினர்களாக
கதிரவன் கலைக் கழகத்தின் செயலாளர்
புதுவையூர் பு.தியாகதாஸ்,
சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி.ஜெ.எம்.வலயட். JEZ Reel kids garden international college நிர்வாக பணிப்பாளர் திருமதி.B.N.ஸ்டான்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.