இன்றைய தினம் 05.03.2026 பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்வி நிலையான ஆணை 27(2)ன் கீழ் நீதியும் பொறுப்புக்கூறும் தன்மையும் தொடர்பான கேள்வி பதிலின் போது.
இலங்கையில் நடந்த போரும் அதன்பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளும் பல தீர்க்கப்படாத கேள்விகளை பின்னால் விட்டுச் சென்றுள்ளன. குறிப்பாக கொல்லப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட நபர்களின் நிலை குறித்து இன்னும் பல சந்தேகங்கள் நிலவுகின்றன. செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் போராளிகளாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் உட்பட பலர் இந்தச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், அந்த நிகழ்வுகள் எந்தச் சூழலில் நடைபெற்றன என்பது தெளிவாகப் பதிவாகவோ விசாரிக்கப்படவோ செய்யப்படவில்லை.
இவ்வகையான கடுமையான குற்றச்சாட்டுகள் சர்வதேச மட்டத்திலும் பதிவாகியுள்ளன. 2011 முதல் 2019 வரை Channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட “Sri Lanka’s Killing Fields” மற்றும் “No Fire Zone” உள்ளிட்ட ஆவணப்படங்கள், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை முன்வைத்து, அரசின் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.
அத்தகைய சம்பவங்களில் ஒன்றாக, 2014 ஏப்ரல் மாதத்தில் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு இராணுவ புலனாய்வு நடவடிக்கையின் போது செல்வநாயகம் கஜீபன் (கோபி), சுந்தரலிங்கம் கஜீபன் (தேவிகன்) மற்றும் நவரத்தினம் நவநீதன் (அப்பன்) ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடப்படுகிறது. இம்மூவரும் இராணுவ புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; மேலும் இதுகுறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவங்கள் தனித்தனியாக நிகழ்ந்தவை அல்ல என்று கூறப்படுகிறது. 2004 முதல் 2014 வரை இராணுவ புலனாய்வு அமைப்புகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதாகவும் ஆயுதம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படும் “இஸ்லாமிக் சென்டர்” (Islamic Center) மற்றும் “டிரிபோலி பிளாடூன்” (Tripoli Platoon) எனப்படும் அரசுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் இச்சம்பவங்கள் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த எல்லா சம்பவங்களையும் இணைக்கும் பொதுவான அம்சம், அரசின் பாதுகாப்பு அமைப்புகளின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து நிலவும் பொறுப்புக்கூறல் இல்லாமையும் ஆகும்.
எனவே, கேட்கப்படும் கேள்விகள்: மேற்கண்ட மூன்று நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? இந்த விசாரணைகளை எந்த அதிகாரம் மேற்கொண்டு வருகிறது? இதுவரை எவ்வாறான முடிவுகள் அல்லது கண்டறிதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
“இஸ்லாமிக் சென்டர்” மற்றும் “டிரிபோலி பிளாடூன்” எனப்படும் அமைப்புகளுக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கியதா? அவ்வாயுதங்கள் பின்னர் மீட்கப்பட்டனவா? இதுகுறித்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகள் உள்ளனவா? இருந்தால், அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா?
இக் கேள்விகள் தொடர்பான பதிலுக்கு அமைச்சர் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்திருந்தார். அவருக்கு நான் சமர்ப்பித்த ஆவணத்தின் ஓர் பகுதி இனைக்கப்படுள்ளது.
“இலங்கை இராணுவத்தால் தேடப்பட்டு வந்த கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகிய மூவர், வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஏப்ரல் 2014-ல் இலங்கை படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய அமைப்பை உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
சம்பவம்: 2014 ஏப்ரல் மாதம் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் மூவரும் கொல்லப்பட்டனர். சிறிலங்காப் படைகளால் தேடப்பட்டு வந்த கோபி அப்பன் தேவிகன் ஆகிய மூவரும் நெடுங்கேணிப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நெடுங்கேணி வெடிவைத்தகல்லுப் பகுதி காட்டுப் பகுதியை அண்டிய வீடொன்றைச் சுற்றி வளைத்த போது இவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது இடம்பெற்ற மோதலில் கோபி எனப்படும் செல்வநாயகம் கஜீபன், தேவிகன் எனப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் அப்பன் எனப்படும் நவரத்தினம் நவநீதன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது”.
நெடுங்கேணியில் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர்.
போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கோபி போரின் முடிவில் இலங்கை படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோபி – கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டனர்.”


