மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்கு ஒளி இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா, வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இன்று (04.03.2026) காலை 09.00 மணிக்கு மட்/மமே/ குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதலாவது சஞ்சிகை வெளியானதைத் தொடர்ந்து, சரியாக பத்து வருடங்கள் கழித்து 2026 ஆம் ஆண்டில் இந்த இரண்டாவது சஞ்சிகை மலர்வது வலயத்தின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத் தமிழ் கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.மேகராசா, நூல் நயவுரையாளராக கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ந.நேசகஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களின் கூட்டு முயற்சியால் இந்த சஞ்சிகை ஓர் அறிவுப் பொக்கிஷமாக உருப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பாட இணைப்பாளர் பு.சதீஸ்குமாரை ஆசிரியராக கொண்டு வெளிவந்துள்ள இச்சஞ்சிகையில் கட்டுரை, கவிதை, சிறுகதை போன்ற ஆக்கங்கள் உள்ளடங்கி உள்ளன. வலய உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


