விஜய் – சங்கீதா விவாகரத்தில் மனுவில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் என்ன?

விஜய், சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் சங்கீதா.

1999 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒருவர் மீது ஒருவர் அன்புடனும் பிரியத்துடனும் வாழ்ந்து வந்தனர்.

பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, குறிப்பாக விஜயின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, நண்பர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் பெரும்பாலும் இணைந்து கலந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

இதில் சஞ்சய் கனடாவில் திரைப்பட படிப்பு முடித்துவிட்டு தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

அதேபோல் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக விஜய் – சங்கீதா ஆகிய இருவருக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஒரு நடிகை காரணம் என செய்திகள் பரவி வந்தன. குறிப்பாக கடந்த ஆறு வருடங்களாக அந்த செய்தி வதந்தியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் தற்போது சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

தன்னுடைய விண்ணப்பத்தில் இந்த முடிவுக்கு காரணம் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததுதான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த செய்தி தெரிய வந்தது தனக்கு மன வலியையும், வருத்தத்தையும் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பொதுவெளி பின்பத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தை நாடாமல் இருந்தேன்.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்த இரு முறை முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே சங்கீதாவின் விவாகரத்து மனு குறித்து வலைதளங்களில் சில விவாதங்கள் எழுந்துள்ளன.

சங்கீதா ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை பூர்வீகமாக கொண்டாலும் சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவருடைய வாழ்க்கைத் துணையாக மாறியவர்.

இவருடைய தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். பிறப்பால் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா, இந்தியாவில் விவாகரத்து பெற முடியுமா என்கிற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விஷயங்களுக்கு சங்கீதாவின் விவாகரத்து மனுவில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் விவாகரத்து கோரியுள்ள சங்கீதா, தனது மனுவில் 4வது குறிப்பில், “திருமணம் முதன்முதலில் 10.07.1998 அன்று யுனைடெட் கிங்டம் எனப்படும் இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்றும் அதன் பிறகு, 25.08.1999 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் இந்து முறைப்படி சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டதற்கான விவரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், சென்னையில் நடைபெற்ற திருமணப் பதிவு விவரங்கள் நடிகர் விஜய்யிடம் உள்ளதாகவும், அவற்றை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றும் சங்கீதா தரப்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தான் இங்கிலாந்து குடிமகள் என்பதை மனுவில் வெளிப்படுத்தியுள்ள சங்கீதா, லண்டனில் பி.எஸ்சி பட்டம் பெற்று, திருமணத்திற்குப் பிறகு, முதலில் சாலிகிராமத்திலும், பின்னர் அடையார் கஸ்தூரிபா நகரிலும், இறுதியாக நீலாங்கரை ஸ்ரீ கபாலீஸ்வரர் நகரிலும் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும், தற்போதும் அங்கேயே வசித்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரம் விஜய் இந்திய குடிமகன் என்பதையும் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் – சங்கீதா விவாகரத்து விஷயம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருக்கும் சட்ட சிக்கல் குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலதிகமாக சங்கீதா 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.