மட்டக்களப்பில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.டபில்யூ.ஜீ திசாநாயக்க அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் எஸ்.கரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையை முன்னிட்டு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து புற்று நோயிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வை அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டினர்.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எமது முன்னோர்கள் மத்தியில் புற்று நோய் பாதிப்பானது மிக அரிய விடயமாக காணப்பட்ட போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இரசாயணங்களினால் உற்பத்தி செய்யப்படும் வாசனை பொருட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், புகைத்தல் மற்று புகையிலை, பொலித்தின் பாவனை போன்ற பொருட்களின் பாவனைகளினால் புற்றுநோய் தாக்கம் ஏற்படுவதற்கான காரணிகளா காணப்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் ஓய்வுநிலை வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.நவலோஜிதன் மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி சபிரா வசிம் ஆகியோர் புற்று நோய் தொடர்பான விளக்கங்களையும் பாதிப்புக்களின் அறிகுறிகள் தொடர்பான கருத்துக்களை தெளிவூட்டினார்கள்.

மேலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டு நோயின் பாதிப்பு தொடர்பான விளக்கங்களை மக்கள் மத்தியில் வழங்குவதினால் புற்று நோய் பாதிப்பில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே புற்று நோயை கண்டு அவற்றுக்கான சிகிச்சை வழக்குவதனால் இறப்பு விகிதத்தை குறைத்து கொள்ள முடியும் என மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும் என துறைசார் நிபுணர்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன்,
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பார் சுபியான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி எம்.ரூதேசன், உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள்,பொலிசார், கிராம சேவகர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

எமது நாட்டில் வருடாந்தம் சுமார் 5000 பெண்கள் மார்பக புற்று நோயியினால் பாதிக்கப்படுவதுடன் இந் நோயினால் சாராசரியாக தினமும் 3 பெண்கள் இறப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள், தொல் தடித்தல், சிறு கட்டி அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக
புற்று நோய் ஆரம்பக்கட்ட பரிசோதனை மூலம் (Screening) நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதனால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தேடுத்து உடற்பயிற்சியை மேற்கொள்வதனால் நோயற்ற வாழ்க்கையை பெற்றுக் கொள்ளலாம்.