அட்டாளைச்சேனை கோணாவத்தை RDS வீதி 23 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாகிறது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை கோணாவத்தை RDS வீதியை 23 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதியாக புனரமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்ட இவ்வீதியினைப் புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (26) கோணாவத்தை பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மிர், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம். றியாஸ், பிரதேச சபை உறுப்பினர் ஜனூபா இம்தியாஸ், பிரஜா சக்தி அமைப்புகளின் தவிசாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை மக்களின் நீண்டகால போக்குவரத்துத் துயரைத் துடைக்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம். றியாஸ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவிடம் முன்வைத்த விசேட வேண்டுகோளுக்கிணங்கவே, அரசாங்கத்தின் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தில் இவ்வீதி உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.