நூருல் ஹுதா உமர்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியின் தரம் மற்றும் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) களப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஆரோக்கியமே முதன்மை நோக்கமாகக் கொண்டு, கஞ்சி தயாரிப்பு மற்றும் விநியோக செயல்முறைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கஞ்சி காய்ச்சப்படும் இடங்கள், பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் தூய்மை குறித்து நேரடிப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், கஞ்சி தயாரிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு முன்பே வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், பாதுகாப்பான நீர் பயன்பாடு, சுத்தமான பாத்திரங்கள் மற்றும் மூடிய சூழலில் உணவு தயாரித்தல் போன்ற அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் மூலப்பொருட்களின் தரம், சேமிப்பு முறை, காய்ச்சும் செயல்முறை மற்றும் விநியோகிக்கும் வரை அனைத்து நிலைகளிலும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரமழான் மாதத்தில் பெருமளவில் பொதுமக்கள் ஒன்றுகூடி நோன்பு திறப்பதனால், உணவுப் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சுகாதாரமான முறையில் நோன்பை அனுஷ்டிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆரோக்கியமான ரமழான் ஒன்றை கொண்டாடுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


