சுவிஸ் நாட்டில் உள்ள சூக் கூன்ன் பேர்க் சித்திவிநாயகர் ஆலய நிர்வாக சபையினர் , பல மில்லியன் ரூபா பெறுமதியான உலோக தெய்வ விக்கிரகங்களை , திருகோணமலை மாவட்டத்திற்க்கு அனுப்பி வைத்துள்ளார்கள் .
மேற்படி பல மில்லியன் ரூபா பெறுமதியான உலோக தெய்வ விக்கிரகங்கள் , மற்றும் ஆலய பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டியை சுவிஸ் நாட்டில் இருந்து , சூக் சித்திவிநாயகர் ஆலய கௌரவ தலைவர் இளங்கோ அவர்கள் , சுவிஸ் தொழிலதிபர் திரு50 ( திருச்செல்வம் ) அவர்களின் நிதிப் பங்களிப்போடு , புகழ்மிகு திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய கௌரவ தலைவர் சட்டத்தரணி துசியந்தன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் .
சூக் சித்திவிநாயகர் ஆலய சமூகமும் , புலம்பெயர் தமிழ்மக்களும் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையோரங்களில் உள்ள இந்து ஆலயங்களை வளர்க்க வேண்டும் என்ற நல் நோக்கிலும் ,
ஆலயங்கள் வளம் பெற்றாலே , அப்பகுதியில் தமிழர் பண்பாடு , தமிழர் கலை , தமிழர் வரலாறு , மொழி என்பனவற்றை பாதுகாக்க முடியும் , இதன் மூலமே எல்லையோரங்களை சிங்கள ஆக்கிரமிப்புக்களில் இருந்து பாதுகாக்க முடியும் என நம்பி , இத்தகைய பேருதவிகளை செய்து வருகிறார்கள் . இத்தகைய முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை.
புலம்பெயர் தேசங்களில் உள்ள ஆலயங்கள் பல லட்சக்கணக்கான பணங்களை கொண்டுள்ள போதிலும் , எல்லையோரங்களில் உள்ள இந்துக் கோயில்கள் பாடசாலைகளுக்கு உதவுவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை .
கேளிக்கை நிகழ்வுகளையும் , தேவையற்ற செலவுகளையும் தவிர்த்து , தாயகத்தில் எல்லையோர மாவட்டங்கள் , எல்லையோர கிராமங்களில் உள்ள ஆலயங்களை கட்டி வளர்ப்பதுவும் , அவற்றின் ஊடாக சமூக சமய பணிகளை ஆற்றுவதுமே அவசியமானது .
இவற்றை புலம்பெயர் ஆலயங்கள் மட்டுமல்ல , ஈழத்தில் உள்ள ஆலயங்களும் சமூக பொறுப்போடு செய்யவேண்டிய கடமை இருக்கிறது .
எல்லையோரங்களில் வாழுகின்ற தமிழ்மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள் .
பூர்வீக கிராமங்களாக இருந்த தமிழ்க்கிராமங்கள் இன்று சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன . அரச நிர்வாக கட்டமைப்பு சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது .
அப்பகுதிகளில் வாழும் மக்கள் தினமும் இனச்சிதைவுக்குள் ஆளாகிறார்கள் .
அவர்களின் மொழி , பண்பாடு , கலை , கலாசாரம் என்பன அழிக்கப்படுகின்றன .
இதன் மூலம் தமிழ்த்தேசிய அடையாளங்கள் இல்லாதொழிக்கப்படுகின்றன.
இவற்றை கருத்தில் கொண்டு , எல்லையோரங்களில் உள்ள ஆலயங்கள் கட்டியெழுப்ப படவேண்டும் .
அவறின் ஊடாக தமிழ்த்தேசிய அடையாளங்கள் பேணப்படவேண்டும் .
இதன் மூலம் தமிழர் தாயக எல்லைகள் அடையாளப் படுத்தப்படவேண்டும் .
இதன் மூலம் எல்லையோரங்களில் உள்ள தமிழ்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் . இதற்காக பாடுபடும் சுவிஸ் சூக் சித்திவிநாயகர் ஆலயம் போன்ற அமைப்புக்களும் அடியவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள் .
இவர்களை முன்மாதிரியாக கொண்டு புலம்பெயர் ஆலய சமூகங்கள் உழைக்கவேண்டும் என அனைவராலும் கருதப்படுகிறது .


