பிரேரணைகள் காரணங்கள் இன்றி எதிர்க்கப்படுவதால் ஒரு சில வாரங்களுக்குப் பிரதேச சபையின் அத்தியாவசிய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

(சுமன்)
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சபையில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் எதுவித காரணங்களுமின்றி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதிர்க்கப்படுவதும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் நடுநிலை வகிக்கப்படுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையால் சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாத நிலையில் ஒரு சில வாரங்களுக்கு சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சேவை நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான தீர்மானம் இன்றைய சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09வது சபை அமர்வு பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்றது.

சபைச் சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற அமர்வில் தவிசாளர் உரை, மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான உறுப்பினர்களின் பிரேரணைகள் அடங்கலாக தவிசாளரினால் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று குறித்த பிரரேணைகள் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைத் தலைமையாகக் கொண்ட கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 05 பேர் எதிராகவும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 03 பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 08 உறுப்பினர்களும் பிரேரணையை ஆதரித்தனர்.

16 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் 08 உறுப்பினர்கள் எதிர் நிலைப்பாட்டில் உள்ளமையால் குறித்த பிரேரணைகளை நிறைவேற்ற முடியாத நிலையிலும், குறித்த பிரேரணை எதிர்ப்பிற்கான காரணங்கள் உறுப்பினர்களால் சொல்லப்படாத நிலையிலும் சபையின் சேவை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத நிலையில், பிரேரணைகளை நிறைவேற்றும் போதே சபையின் செயற்பாடுகள் முன்கொண்டு செல்ல முடியும் என்பதால் சபையின் சேவை நடவடிக்கைகளை ஓரிரு வாரத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதாகத் தவிசாளர் இதன்போது சபையில் தெரிவித்தார்.

இதன் பின்னர் இது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தாங்கள் ஏன் இந்தப் பிரேரணைகளை எதிர்க்கின்றோம், நடுநிலை வகிக்கின்றோம் என்ற காரணத்தைக் கூறி இதனை நிராகரித்தால் அதில் திருத்தங்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியும். ஆனால் இவ்வாறு எடுத்த எடுப்பில் பிரேரணையை நிராகரிப்பது எமக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்பதுடன், வட்டார ரீதியிலும் எவ்வித பணிகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதற்கு முன்னர் 08 சபை அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதில் பல விளக்கங்களையும் நிறைய பிழைகளையும் சுட்டிக் காட்டியிருக்கின்றோம். அந்த விடயங்களை நீங்கள் சீர் செய்யவில்லை, அதற்கான எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் நாங்கள் சட்டத்தை நாடியுள்ளோம். சட்டம் ஊடாக எமக்கு என்ன பதில் வருகின்றதோ அதன் பிரகாரமே தொடர்ந்து நாங்கள் ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்ற முடிவை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் கோவில் போரதீவு உறுப்பினர் கோபி அவர்களினால் நெல் சந்தைப்படுத்தல் கட்டிடம் தொடர்பான பிரரேணை கொண்டு வரப்பட்ட போது. இதனை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மத்திய அரசின் ஊடாகச் செய்யப்போவதாக 02வது சபை அமர்வில் தெரிவித்தார்கள். ஆனால் இன்று வரை இதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை வெறும் பேச்சளவில் மாத்திரம் இல்லாமல் செயலில் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் உறுப்பினர்களின் எவ்வித கருத்துகளும் இன்மையால் உபதவிசாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கூட்டத்தின் பின் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
போரதீவுப்பற்றுப் பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 08 உறுப்பினர்களும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 05 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்களும் உள்ளனர். இன்றைய தினம் சபையின் 09வது அமர்வு இடம்பெற்றது. இதன்போது சபையினால் வட்டார ரீதியில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி விடயங்கள் பேசப்பட்டன. பொதுவாக தவிசாளரினால் பிரேரணைகள் கொண்டு வரப்படுகின்ற போது தொடர்ச்சியாக செய்வது போன்று இம்முறையும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்தும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தும் உள்ளார்கள். இதற்கான காரணங்கள் எதுவும் அவர்களால் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களாக இதே நிலைப்பாடுகளே சபையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சேவை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படுகின்றது. இதன் காரணமாக எமது போராதீவுப் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அத்தியாவசிய சேவைகளை ஒரு சில வாரங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான இக்கட்டான தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.