திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/02/ 18 ஆம் நாளான அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 2025 ஆம் ஆண்டில் 2463/04 மற்றும் 2467/52 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப் பட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் அத்தியாயம் 203 இன் ஒழுங்குவிதிகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான எனது கருத்துகளை இந்த அவையில் எடுத்துரைக்க விழைகின்றேன்.
இலங்கையின் சாலைப் பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஆனது, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அத்தியாயம் 203 இல், குறிப்பிட்ட இரண்டு ஒழுங்குவிதிகளை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புக்கு உள்ளாகிறது.
மோட்டார் போக்குவரத்து விரைவு நெடுஞ்சாலை ஒழுங்குவிதிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து போதைப்பொருள் ஒழுங்குவிதிகள் ஆகிய இந்த விதிமுறைகள், வளர்ந்து வரும் போக்குவரத்து அபாயங்களுக்கு அரசின் விடையாக அமைகின்றன.
பல பதிற்றாண்டுகளாக, இலங்கையின் சாலைப் பாதுகாப்பு கட்டமைப்பானது; விரிவான நடைமுறைகள் இல்லாத அடிப்படைச் சட்டங்களால் முடக்கப் பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் சாலை விபத்து இறப்புகள் நூறாயிரம் மக்கள் தொகைக்கு 15.2 ஆக இருந்தது.
இது ஆசிய-பசிபிக் சராசரியை விட கூடுதலாக இருப்பதால், சான்றுகள் அடிப்படையிலான தலையீடுகள் கட்டாயமாகின்றன.
2025 ஆம் ஆண்டின் திருத்தங்கள் வெறும் கருவிக் கட்டளைகள் மட்டுமல்ல; அவை போதைப்பொருள் பாவனையாளரைக் கண்டறிதல் மற்றும் விரைவுநெடுஞ்சாலைப் பாதுகாப்பில் நீண்டகாலமாக இருந்த “நடைமுறை வெற்றிடத்தை” நிரப்பும் கருவிகளாகும்.
புதிய ஒழுங்குவிதிகளின் முதன்மை மற்றும் சிறப்புக் கூறுகள்;
முதலாவது ஒழுங்குவிதியான மோட்டார் போக்குவரத்து விரைவுநெடுஞ்சாலை ஒழுங்குவிதிகள், விரைவுநெடுஞ்சாலை வலையமைப்பைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பாதுகாப்பு இருக்கைப் பட்டித் (seat belt) தேவைகளைக் கணிசமாக விரிவு படுத்துகிறது.
புதிய ஒழுங்குவிதி 8A இன் படி, விரைவு நெடுஞ்சாலையில் வாகனம் இயங்கும் பொழுது; ஓட்டுநர் மற்றும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பு இருக்கைப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்.
ஒழுங்குவிதி 8B இன் கீழ், அனைத்து பயணிகளுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு இருக்கைப் பட்டி பொருத்தப்படாத எந்தவொரு வாகனமும் விரைவு நெடுஞ்சாலையில் நுழையத் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஒழுங்குவிதி 8C இன் படி, இதன் பொறுப்பு வாகன உரிமையாளர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
ஒழுங்குவிதி 8E(a) இன் படி, ஓட்டுநர் இருக்கை ஆனது மேல்நோக்கிய மற்றும் பக்கவாட்டு பாதுகாப்பு பட்டிகள் மூன்று-புள்ளி நங்கூர அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒழுங்குவிதி 8E(b) இன் படி, முன் மற்றும் பின் இருக்கைகள் ஆனவை; இருக்கை வடிவமைப்பைப் பொறுத்து குறைந்தபட்சம் இரண்டுபுள்ளி நங்கூர அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒழுங்குவிதி 8D(1)(b) இன் படி, இரட்டை நோக்க வாகனங்கள் மற்றும் இலகு மோட்டார் வாகனங்களின் அனைத்து பின் மற்றும் நடு இருக்கைகளுக்கும் தனிப்பட்ட பாதுகாப்புப் இருக்கைப் பட்டி கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒழுங்குவிதி 8D(1)(c) இன் படி, பாடசாலை மற்றும் அலுவலக சேவைகளில் ஈடுபடும் போக்குவரத்து வாகனங்களில் அனைத்து இருக்கைகளுக்கும் பாதுகாப்பு இருக்கைப் பட்டி கட்டாயம் ஆகும்.
இரண்டாவது ஒழுங்குவிதியான; மோட்டார் போக்குவரத்து போதைப்பொருள் ஒழுங்குவிதிகள் ஆனவை, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவரைக் கண்டறிவதற்கான விரிவான நடைமுறைக் கட்டமைப்பை வழங்குகிறது.
இதன் மையப்பகுதி ‘நியாயமான ஐயம்’ என்பதாகும். ஒரு ஓட்டுநரின் அசாதாரண நடத்தை, பேச்சு மாற்றம், உடல் சமநிலை இழப்பு அல்லது ஆடைகளின் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு காவற்துறை அதிகாரி பரிசோதனையைத் தொடங்கலாம்.
மேலும் அவருக்கு காவற்துறை மா அதிபரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உமிழ்நீர் பரிசோதனைக் (saliva test) கருவியைப் பயன்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் புதிய ஒழுங்குவிதிகள் முந்தைய சட்ட கட்டமைப்பில் இருந்து கணிசமாக வேறுபடுகின்றன. 1979 ஆம் ஆண்டின் 31 ஆம் எண் கொண்ட சட்டம் போதைப்பொருள் பாவனையைத் தடை செய்திருந்தாலும், அதை உறுதிப் படுத்துவதற்கான துல்லியமான நடைமுறைகள் அதில் இருக்கவில்லை.
1979 மற்றும் 2011 ஆம் ஆண்டின் சட்டங்களின் படி, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவரை கண்டறிவதற்கு காவற்துறை அதிகாரியின் அகநிலை ஐயம் மட்டுமே தகுதியாக இருந்தது. சோதனைக் கருவிகள் கட்டாயமாக இருக்கவில்லை.
2025 ஆம் ஆண்டின் புதிய ஒழுங்குவிதியின் படி, காவற்துறை அதிகாரியின் அகநிலை ஐயத்தோடு ஒப்புதல் அளிக்கபட்ட உமிழ்நீர் சோதனை கருவியும் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.
முன்னைய சட்டத்தின் படி , போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவரை அறிவியல் அடிப்படையில் கண்டறிவதற்கு அரச மருத்துவ அதிகாரி (GMO) அறிக்கை போதுமானதாக இருந்தது. ஆய்வக உறுதிப்படுத்தல் கட்டாயமாக இருக்கவில்லை. புதிய ஒழுங்கு விதியின் படி, அரச மருத்துவ அதிகாரி (GMO) அறிக்கையோடு ஆய்வக உறுதிப்படுத்தலும் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.
முன்னைய சட்டத்தின் படி , இலகுரக வாகனங்களின் முன் இருக்கைக்கு மட்டுமே பாதுகாப்பு இருக்கைப் பட்டி கட்டாயம் ஆக இருந்தது. புதிய ஒழுங்கு விதியின் படி, விரைவு நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து வாகனங்களின் அனைத்து இருக்கைகளுக்கும் பாதுகாப்பு இருக்கைப் பட்டி கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.
முன்னைய சட்டத்தின் படி , பாதுகாப்பு இருக்கைப் பட்டி அணிவதை உறுதிப் படுத்துவது ஓட்டுநரின் பொறுப்பாக மட்டும் இருந்தது. புதிய ஒழுங்கு விதியின் படி, பாதுகாப்பு இருக்கைப் பட்டி அணிவதை உறுதிப் படுத்தும் பொறுப்பு ஓட்டுநர், வாகன உரிமையாளர் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னைய சட்டத்தின் படி , மது அருந்தி வாகனம் ஓட்டுவதற்கு 2,000 ரூபா தண்டம் விதிக்கப் பட்டது. புதிய ஒழுங்கு விதியின் படி, 25,000 –30,000 ரூபா வரை தண்டத்தை அதிகரிக்க முன்மொழியப் பட்டுள்ளது.
பாதுகாப்பு நோக்கங்கள் தெளிவாக இருந்தாலும், தனியார் போக்குவரத்துத் துறையினரிடமிருந்து புதிய ஒழுங்குவிதிகள் பற்றிக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ 6,000 பேருந்துகளில் பாதுகாப்பு இருக்கைப் பட்டிகள் பொருத்தப் படவில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
பழைய பேருந்துகளில் பாதுகாப்பு இருக்கைப் பட்டிகள் பொருத்துவது தொழில்நுட்ப அடிப்படையில் கடினமானது மற்றும் செலவு மிக்கது.
அறிவியல் அடிப்படையில் , உமிழ்நீர் பரிசோதனைகளின் துல்லியம் குறித்து ஐயங்கள் எழுப்பப் பட்டுள்ளன. சில ஆய்வுகளின்படி, உமிழ்நீர் சோதனைகளில் 31% வரை தவறான முடிவுகள் வர வாய்ப்புள்ளது.
மேலும், ஆடைகளின் தோற்றம், காவற்துறையினரின் அகநிலை அளவுகோல்கள் ஆகியன காவற்துறை பொதுமக்களை துன்புறுத்த வழிவகுக்கும் என்றும் விமர்சிக்கப் படுகிறது.
பாதுகாப்பு இலக்குகளுக்கும் பங்குதாரர்களின் கவலைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க பின்வரும் பரிந்துரைகளை நான் முன்வைக்கின்றேன்.
1. நிதி உதவி: தனியார் போக்குவரத்து ஓட்டுநர்களுக்காக முன்மொழியப்பட்ட நலன்புரி நிதியத்தை செயற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கு மானியம் வழங்குதல்.
2. பழைய வாகனங்களை அகற்றுதல்: பழைய பேருந்துகளில் பாதுகாப்பு இருக்கைப் பட்டிகள் பொருத்துவதற்குப் மாற்றாக, புதிய வாகனங்களுக்கு மாறுவதற்கான உதவிகளை வழங்குதல்.
3. தெளிவான சட்டங்கள்: மருத்துவ அடிப்படையில் தேவைப்படும் மருந்துகள் மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுக்கு இடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் சட்டங்களைச் சீரமைத்தல்.
4. தொழில்நுட்ப வெளிப்படைத்தன்மை: காவற்துறையினர் சோதனைகளை மேற்கொள்ளும் பொழுது, உடலில் அணியும் நிழற்படக் கருவிகளை (Body-Worn Cameras) பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்குதல்.
இலங்கையின் 2025 ஆம் ஆண்டின் புதிய ஒழுங்குவிதிகள்; பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளின் சிறந்த நடைமுறைகளை நெருங்குகின்றன.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் போதைப் பொருள் சோதனைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுகின்றன.
சிங்கப்பூரில் மீண்டும் மீண்டும் தவறு இழைப்பவர்களுக்கு கட்டாய சிறைத் தண்டனை மற்றும் பாரிய தண்டங்கள் விதிக்கப் படுகின்றன.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் முன்மொழியப் பட்டுள்ள இந்த இரண்டு ஒழுங்குவிதிகளும் இலங்கையின் போக்குவரத்து பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தத் தேவையானவை ஆகும்.
இருப்பினும், இவற்றை நடைமுறைப் படுத்தும்பொழுது, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறைகூவல்களை கவனத்திற் கொண்டு, வெளிப்படையான முறையில் செயல்படுத்துவது அவசியமாகும் எனக் கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.


