கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை.

தனிப்பட்ட உரிமை, மனித உரிமைகள் செயலிழக்கும் நிலையினை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. கருத்துச் சுதந்திரம் வெளிப்பாட்டுச் சுதந்திரமற்ற நாடு மகிழ்ச்சியான நாடாக இருக்கப் போவதில்லை. எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதோடு தற்போது வரைபாக இருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டத்தினை அரும்பிலேயே கைவிடுங்கள் என்று கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு குறித்து நீதி அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இக்கோரிக்கையை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் முன்வைத்துள்ளது.

ஒன்றியம் சனிக்கிழமை (21.02.2026) அனுப்பிவைத்துள்ள அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பிட்டுள்ளதாவது,

ஒரு நாட்டில் ஊடகத்துறையானது சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய, செயற்படக்கூடிய நிலைமை காணப்படுவது அவசியமாகும். ஆனால், பயங்கரவாத்திலிருந்து அரசைப்பாதுகாக்கும் சட்ட வரைபில் காணப்படுகின்ற மிகவும் கடுமையான அடக்குமுறை மற்றும் ஜனநாயக எதிர்ப்பு ஏற்பாடுகள் காரணமாக அதனை உடனடியாக அகற்றிக் கொள்வதே சிறப்பான நடைமுறையாக காணப்படும் என்பது எமது அமைப்பின் வேண்டுகோளாகும்.

இச் சட்டவரைபானது ‘பயங்கரவாதம்’ என்பதற்கான தெளிவான வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தல், அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது ஆட்சியாளர்கள் விரும்பத்தகாத, விருப்பமற்ற கருத்துக்களை தெரிவிப்பதுகூட, ‘அரசுக்கு எதிரான நடவடிக்கை என வியாக்கியானம் செய்வதற்கேதுவானதாக விளக்கமளிக்கப்பட்டிருப்பத் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இரகசியத் தகவல்கள் மற்றும் சிவில் நடவடிக்கைகள் குறித்த சரத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நடைபெறுகின்ற அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வேளைகளில் புகைப்படம் எடுத்தல், பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடு தொடர்பில் அறிக்கையிடுதல் போன்றவைகள்கூட குற்றமாக கணிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

தகவல்களை அறிக்கையிடுதல் தொடர்பான சரத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழிற்றுறையாளர்களினதும் மற்றும் சமயத் தலைவர்களினதும் தொழிற்றுறை இரகசியத் தன்மை மற்றும் ஒழுக்கவியல் விடயத்தில் மிகப் பாரதூரமான மீறல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

அதே போன்று, இணையதள மற்றும் டிஜிட்டல் வெளியில் சட்டத்தினூடாக வழங்கப்படுகின்ற அதிகாரத்தின் மூலம் நபர்களின் தொடர்பாடல் உரிமை மறுக்கப்படுவதற்கான வாய்ப்பு, ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர், கரையோரப் பாதுகாவலர்களுக்கு கைது செய்வதற்கு மற்றும் தேடுகையிடுவதற்காக அதிகாரம் அடக்குமுறை ஆளுகைக்கு வழியேற்படுத்தும். “பயங்கரவாதத்திற்கு உடந்தையளிக்கின்றார்” என்ற அடையாளப்படுத்தலில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுதல் நடைபெறலாம்.

எந்தவொரு விமர்சன ரீதியான அறிக்கையிடலையும் சட்டத்தின் வலையில் சிக்க வைக்கும் இயலுமை அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம் செயலிழக்கச் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு . கடந்த காலங்களில் நடைபெற்ற பெருமளவான உதாரணங்கள் இருந்தாலும், அண்மையில் நகைச்சுவைக் கலைஞரான நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை அண்மைய உதாரணமாக காண்பிக்கமுடியும்.

இவ்வாறு சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக பெறுமதிகள் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய விசேட அடக்குமுறையான சட்டங்களுக்கு பதிலாக, நாட்டில் நடைமுறையிலுள்ள சாதாரண குற்றவியல் சட்டங்களை (அவசியமெனில், சர்வதேச மனித உரிமைச் சட்டகங்களை மீறாத வகையில்) இற்றைப்படுத்தி முன்னேற்றி சட்டத்தின் ஆளுமையை உறுதிப்படுத்தி பிரஜைகளின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களது பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிகோலுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அத்தோடு, தேசிய பாதுகாப்பு என்பது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக பெறுமதிகளை கொன்றொழிப்பதற்காக பயன்படுத்தும், மனித உரிமைகளை அடக்கி ஒடுக்குகின்ற, பிரஜைகளின் குரலை முடக்குகின்ற பயங்கரவாத்த தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதோடு தற்போது வரைபாக இருக்கின்ற பயங்கரவாத த்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டத்தினை அரும்பிலேயே கைவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இதுவரையில் விசாரணைகள் இன்றி, சிறைச்சாலைகளிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர், இவ்வாறு கடந்த காலங்களிலும் வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறாக பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் உள்ள போதும் அதற்கு மேலாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வருவதானது மக்களையும், குறிப்பாக ஊடகவியலாளர்களையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் மென்மேலும் அடக்குமுறைக்குள் தள்ளும் என்பதில் எது வித ஐயமில்லை. எனவே அரசாங்கம் புதிதாகக் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை உடனடியாக கைவிடுமாறு எமது ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுகிறது.
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.