மட்டக்களப்பு தளவாய் பகுதிகளில் மர்ம நபர்களால் வீசப்படும் கழிவுகள்

ஏறாவூரில் இருந்து கொண்டுவரும் கழிவு மூட்டைகளை தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டு செல்லும் மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்களை பிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தளவாய் பகுதிகளில் மர்ம நபர்களால் வீசப்படும் கழிவுகள் குறித்து பொதுமக்கள் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தளவாய் வட்டார உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஏறாவூர் நகர் பகுதியில் உள்ள சிலர் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு அருகிலும், புன்னைகுடா வீதி மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளில், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் மலக் கழிவுகளை மூட்டைகளில் கட்டிவந்து வீசி விட்டு செல்கின்றனர். இதனால் தளவாய் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு துர்நாற்றம் விசுகிறது. அத்தோடு இந்து ஆலய வழிபாட்டின் புனிதத் தன்மைக்கு குந்தகம் ஏற்படுகிறது, பல தடவைகள் இந்த பகுதிகளில் கழிவுகளை கொண்டு வந்து வீசுபவர்களை இந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பிடித்து எச்சரித்து மீண்டும் குப்பைகளை ஏற்றி அனுப்பி உள்ளனர்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் அந்த பகுதிகளில் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர்.
ஏறாவூர் நகர சபையால் தினமும் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கழிவுகள் ஏற்றிச் செல்லப்படும் நிலையில் குறித்த கழிவுகளை நகர சபை குப்பை வண்டிகளுக்கு கொடுக்காது தளவாயில் உள்ள ஆலயங்கள், மக்கள் வாழும் பகுதிகள், நீர் வழிந்தோடும் கால்வாய்களில் வீசி விட்டு செல்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

மிக மோசமான அருவருக்கத்தக்க இந்த செயலை செய்பவர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள உள்ளோம்.
இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஊடாக ஏறாவூர் நகர சபைக்கு தெரியப்படுத்துவதோடு, கழிவுகளை கொண்டு வந்து வீசிவிட்டு செல்பவர்களை பிடித்து கொடுப்பதற்கு தளவாயில் உள்ள பொது அமைப்புகள், ஆலய நிர்வாக சபையினர் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
எனவே இனிவரும் காலங்களில் இந்த பகுதிகளில் மிக மோசமான அருவருக்கத்தக்க கழிவுகளை மூட்டைகளில் கட்டிவந்து வீசி விட்டு செல்பவர்கள் இதனை நிறுத்தி கொள்ள வேண்டும். அல்லது அவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அபராதமும் விதிப்பதற்கு பிரதேச சபை ஊடாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். என தெரிவித்தார்.

அத்தோடு தளவாய் காளி கோயிலுக்கு அருகில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள கோழிப் பண்ணை தொடர்பாகம் , வீதி விளக்குகள் இல்லாத காரணத்தால் தான் வீதிகளில் இரவு நேரங்களில் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றார் என்றும், தளவாய் பகுதிக்கு கழிவு அகற்றும் வாகனங்கள் வராமல் இருப்பதால் ஏராளமான கழிவுகள் தேங்கி கிடப்பதாகவு தளவாய் மீனவர் சங்கம், ஆலய நிர்வாகத்தினர் பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.