இன்றைய (19.02.2026) பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கள் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் தொடர்பாக முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காக்கட்சி வட்டை, விளாந் தோட்டம், திக்கோடை–தும்பாளை பகுதிகள் மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிரான்குளம், தர்மபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அரசாங்கம் கடந்த ஆண்டில் நீர்வளங்கள் அதிகார சபை மூலம் 14 கிலோமீட்டர் மற்றும் TD திட்டத்தின் மூலம் 8 கிலோமீட்டர் நீர்வழங்கல் பணிகளை நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப கட்ட திட்டங்களாக:
கொக்கட்டிச்சோலை – 10 கி.மீ
களுவாஞ்சிக்குடி – 13 கி.மீ
மண்டூர் – 11 கி.மீ
என மொத்தம் 42 கிலோமீட்டர் நீர்வழங்கல் திட்டங்களும், கூடுதலாக நீர்வளங்கள் அதிகார சபை மூலம் 12 கிலோமீட்டர் நீர்வழங்கல் பணிகளும் மேற்கொள்ள அமைச்சகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், காக்காச்சிவட்டம் பிரதேசத்தில் உள்ள புளியடி, நெல்லிக்காடு, பாலையடி வட்டை, 37 மற்றும் 38 ஆம் கிராமங்கள், வால்கட்டு, வாதகல் மடு, பன்சேனை போன்ற பல கிராமங்களில் இன்னும் நீர்விநியோக சிக்கல்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த பகுதிகளுக்கு நீர் வழங்குவதில் முக்கிய சிக்கல் என்னவெனில், அவை அம்பாறை மாவட்டத்திலிருந்து நீர் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பதாகவும், மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அமைப்பிலிருந்து நேரடி இணைப்பு வழங்க இயலாததாகவும் குறிப்பிடப்பட்டது.
இதற்கான மாற்று தீர்வாக, மண்டூரில் அமைந்துள்ள நீர்வளங்கள் அதிகார சபை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் புதிய “பேக்கேஜ்” அடிப்படையிலான இணைப்பு முறைமையை உருவாக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலத்தை வழங்க பிரதேச செயலாளர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட திட்டங்களில் சேர்க்கப்படாத ஏனைய தேவையுள்ள பகுதிகளுக்கும் விரைவில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்நிகழ்வின் மூலம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


