( வி.ரி.சகாதேவராஜா)
உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா நேற்று (19) வியாழக்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மடத்தில் ஆன்மீகப் பக்தி நெஞ்சங்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் சு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மாணவர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
விழா நிகழ்ச்சிகள் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவதன் மூலம் தொடங்கியது. தொடர்ந்து, அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள் குறித்து சிறப்புரைகள் பஜனைகள் மற்றும் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவரான ஸ்ரீ இராமகிருஷ்ணர், அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே என்பதைக் தனது ஆன்மீக அனுபவங்களின் மூலம் உணர்ந்து வலியுறுத்தியவர்.
இவ்விழா, ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் போதனைகளையும் மனித நேயக் கருத்துகளையும் மறுமுறை சிந்திக்க வைக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


