மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை புறக்கணிக்கும் NPP அரசு.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி–பதில் நேரத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பாக அவசர கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயங்களுக்கு பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் Sri Lanka Parliament-இல் தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, Mahaweli Authority of Sri Lanka முன்னெடுத்து வரும் நீர்ப்பாசனத் திட்டங்களின் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அண்மையில் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதமும் இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டது.

மேலும், மகாவலி திட்டத்தின் கீழ் தண்ணீர் விநியோகம் உறுதியாக இல்லாத நிலையிலும், அதனை ஆதாரமாகக் கொண்டு நடைபெறும் மண்ணகழ்வு நடவடிக்கைகள் காரணமாக வெள்ளப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வயல் வெட்டும் காலகட்டத்திலும் நெல்லை காயவைக்க முடியாமல், ஈர நெல்லை குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் நெற்பயிர் சேதம்

தொடர்ச்சியான கனமழை மற்றும் முன்னதாக ஏற்பட்ட புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு, வந்தாருமுலை, கிரான், வாழைச்சேனை உள்ளிட்ட பல்வேறு விவசாய சேவைப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முயன்றபோது, 13 பெப்ரவரி 2026 அன்று காப்பீட்டு காலம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, அவசர சிறப்பு நிவாரணத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 27(2) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ், மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நில ஒதுக்கீடு மற்றும் தேசிய இன விகிதாசாரப் பகிர்வு தொடர்பாக விரிவான விளக்கங்கள் கோரப்பட்டன.

முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்விகள்:

13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் அரசகாணி ஒதுக்கீட்டில் தேசிய இன விகிதாசாரம் பின்பற்றப்பட்டதா? மாவட்ட வாரியாக இன ரீதியான நில விபரங்கள் என்ன?

மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வழங்கப்பட்ட மொத்த நில அளவு (ஏக்கரில்) மற்றும் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை என்ன?

வடக்கு மாகாணத்தில் கிவுல் ஓயா திட்டத்திற்காக எத்தனை ஏக்கர் காணி பயன்படுத்தப்படுகிறது? எத்தனை குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன? மேலும் எத்தனை குடும்பங்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது? பயனாளர்கள் தெரிவு செய்யப்படும் முறைமை என்ன?

மயிலத்தமடு மற்றும் மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்களில் எவ்வளவு பகுதி மகாவலி திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது?

கிவுல் ஓயா திட்டத்திற்காக 13,000 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளுக்காக மகாவலி “எல்” வலயத்திலிருந்து 3000 ஹெக்டேயர் காணி விடுவிக்க முடியாததற்கான காரணம் என்ன?

மகாவலி “கே” வலயம் புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அது எங்கு அமைக்கப்படுகிறது? அதன் பரப்பளவு மற்றும் திட்டத்தின் நோக்கம் என்ன?

நில ஒதுக்கீட்டு கொள்கைகள் காரணமாக மக்கள் அமைப்பில் மாற்றம் அல்லது உள்ளூர் சமூகங்களின் இடம்பெயர்வு ஏற்படாமல் தடுக்க அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

இந்த கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் அரசிடமிருந்து கிடைத்த பின்னரே, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.