கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச செயலக முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் (AMC) கூட்டம் இன்று (17) காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் செல்வி . பிரகலாதன் மதுமிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு அ.றொபர்ட் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு ஏ. எஸ். சசிகரன், பிரதேச செயலக கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் உள்ளிட்ட பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த கூட்டத்தின் குறிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், முந்தைய தீர்மானங்களின் முன்னேற்ற நிலை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பொது கணக்காய்வு வினாக்கள், நிலுவைப் பதில்கள் மற்றும் உள்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், அலுவலக பணியாளர் நிலவரம், வருவாய் வசூல், வைப்பு கணக்குகள் மற்றும் செலவின முன்னேற்றம் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் அஸ்வெசுமா நிதியுதவி திட்டம், சமுர்த்தி முதலீடுகள், சமூக நலத்திட்ட கொடுப்பனவுகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொதிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தனித்தனி மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கணக்காய்வு கேள்விகளுக்கு காலவரையறைக்குள் பதிலளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், உள்கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.