கல்முனையில் இலவச ஸஹர் உணவு வழங்கும் திட்டம் – 8வது ஆண்டாக

நூருல் ஹுதா உமர்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கல்முனை நகரில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியிருப்போருக்கும், வெளியூர்களில் இருந்து கல்முனைக்கு வருகை தந்து தங்கியிருக்கும் பயணிகளுக்கும் இலவச ஸஹர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சமூக நல நோக்கில் கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ரமழான் மாதத்தில், வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியிருப்போர் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வெளியூரிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்கள் ஸஹர் உணவை பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள், 0761381869 எனும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு ஸஹர் நேரத்தில் அவர்களது தங்கும் இடத்திற்கே நேரில் சென்று உணவு வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஒற்றுமையையும், பரஸ்பர உதவித் தன்மையையும் வலுப்படுத்தும் இத்தகைய மனிதநேய முயற்சிகள் பாராட்டத்தக்கவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.