13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரின் நேரடி அனுமதி இருக்க வேண்டும் என்ற சட்டமூலம் போர்த்துகல் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும் முதலாவது சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
சைபர் மிரட்டல்கள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் இணைய வேட்டையாளர்களிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
டிஜிட்டல் மொபைல் கீ (Digital Mobile Key – DMK) எனப்படும் பொது முறைமையின் ஊடாகப் பெற்றோர்கள் தமது அனுமதியை வழங்க முடியும்.
மேலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் மொபைல் கீ முறைமையுடன் ஒத்துப்போகக்கூடிய வயது சரிபார்ப்பு முறையைச் செயல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள், காணொளி மற்றும் புகைப்படப் பகிர்வுத் தளங்கள் மற்றும் ஒன்லைன் சூதாட்டத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய தடையை இந்தச் சட்டம் மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விதிமுறைகளை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருமானத்தில் 2 வீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களின் மனநலம் மற்றும் இணையப் பாதுகாப்பு கருதி அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இவ்வாறான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முழுமையான தடை கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்தது.


