நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பேராளர் மாநாடு கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது சிம்ஸ் கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்சியின் பேராளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக்கினர்.
மாநாட்டின் ஆரம்பத்தில் தேசிய கீதம் மற்றும் மத அனுஷ்டானங்களுடன் நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து கட்சியின் செயற்குழு அறிக்கை, நிதி அறிக்கை மற்றும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
தலைமை உரையாற்றிய பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா அவர்கள், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மேலும், இளைஞர் மற்றும் பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போதைய அரசை மாநாடு வலியுறுத்தியது. மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய தேர்தல்கள் காலதாமதமின்றி நடைபெற வேண்டியது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், கட்சியின் அமைப்பை அடிப்படை மட்டத்தில் பலப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை இயக்கம் முன்னெடுத்தல், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இதனுடன், 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக கடந்த ஆண்டில் கடமையாற்றியவர்களே தொடர்ந்தும் இயங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஜனநாயக முறையில் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிர்வாகம் கட்சியின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை மக்களிடையே வலுவாக கொண்டு செல்லும் வகையில் செயற்படுமென எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டது.
கட்சியின் எதிர்காலப் பயணத்தை உறுதியுடனும் ஒற்றுமையுடனும் முன்னெடுக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டின் இறுதியில் கலந்து கொண்ட பேராளர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், ஒற்றுமை மற்றும் ஜனநாயகப் பண்புகளை முன்னிறுத்தும் உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுற்றது.


