எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்ட மூலோபாய பிரதிநிதிக் குழுவின் அங்கத்தவர்கள் 200 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றான “பிரஜா சக்தி” வறுமையொழிப்பு தேசிய இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்ப பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு சவுக்கடியிலுள்ள ஈஸ்க்கா மாநாட்டு மண்டபத்தில் புதனன்று 04.02.2026 இடம்பெற்றது.
கொடுப்பனவு ஏதுமில்லாத இந்த தன்னார்வ நியமனம் மூன்று வருட காலத்திற்கு அமுலில் இருக்கும் என்று நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜா சக்தி எனும் வறுமையொழிப்பு தேசிய இயக்கத்தின் கீழ் சமுதாய அபிவிருத்தி சபையின் பணிகளை அமுல்படுத்துவதற்காக உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பொதுமக்களின் கருத்துக்கள் அபிவிருத்தித் தேவைப்பாடுகளைப் பரிதிநிதித்துவப்படுத்தி அரச, அரச சார்பற்ற நிறுவுனங்களுடன் ஒருங்கிணைந்து அபிவிருத்திப் பணிகளுக்காக முனைப்பான பங்களிப்பை வழங்குதலே இந்த தன்னார்வ பிரஜா சக்தி உறுப்பினர்களின் பணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ். எச்;. முஸம்மில்;, கிராம அலுவலர்கள், குழுவில் இணைக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் பட்டிருப்பு தேர்தல் தொகுதி அமைப்பாளருமான வனிதா செல்லப்பெருமாள், தேசிய மக்கள் சக்தியின் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.யூ. புஹாரி, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைப்பாளரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான எம்.பி.எம். பிர்தௌஸ், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் எம். நஸீர், தேசிய மக்கள் சக்தி கிளீன் சிறிலங்கா ஏறாவூர் இணைப்பாளர் றகீஸ் சாஜித் உட்பட பிரஜா சக்தியின் தவிசாளர்கள், செயலாளர்களுடன் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்களும் சமுகமளித்திருந்தனர்.


