ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/02/ 03 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் எண் கொண்ட தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவது பற்றிய எனது கருத்துகளை இந்த அவையில் எடுத்துரைக்க விழைகின்றேன்.
2024 இன் 39 ஆம் எண் கொண்ட இலங்கைத் தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டம் ஆனது; 1991 ஆம் ஆண்டின் இலங்கைத் தொலைத் தொடர்புகள் சட்டத்திற்குப் பிறகு நாட்டின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மிக முதன்மையான மாற்றமாகும்.
இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையானது அரசுக்குச் சொந்தமான தனியுரிமைக்கென வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இது புதிய எண்மியச் சூழல், பரந்த,விரைந்த அலைவரிசை மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கையாளத் தவறி இருந்தது.
இங்கு திருத்தச் சட்டத்தின் புதிய கூறுகளை விரிவான பகுப்பாய்வு செய்து பார்ப்போனால்; திருத்தச் சட்டமானது, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவை (TRC) ஒரு சாதாரண உரிமம் வழங்கும் அதிகார சபையிலிருந்து ஒரு புதிய சந்தை ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அதிகார விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத் தரங்களைப் புதுமயம் ஆக்கல் ஆகியவை இந்தச் சட்டத்தின் மையக் கருப் பொருளாக அமைந்து உள்ளன.
1991 ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டம் ஆனது; முதன்மையாக இறுதிப் பயனாளிகளுக்குச் சேவையை வழங்குவோர் (operators) மீதே கவனம் செலுத்தியது. எனினும் திருத்தச் சட்டத்தின் பிரிவு 17 B ஆனது , தொலைத் தொடர்பு உட்கட்டமைப்புச் சேவை வழங்குநர்களையும் (providers) ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருகின்றது.
இதன் மூலம் கோபுரங்கள், வடங்கள் மற்றும் தரைத்தள வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் இனி; ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும்.
திருத்தச் சட்டத்தின் பிரிவு 5 ஆனது; புதிய போட்டி மேலாண்மைக் கருவிகளை அறிமுகப் படுத்துகின்றது. இதன் மூலம் ஆணைக் குழுவானது சந்தை இயக்கவியலை ஆய்வு செய்து, போட்டியைப் புரிந்து கொள்ளச் சந்தை பகுப்பாய்வை மேற்கொள்ளும் அதிகாரத்தை வழங்குகின்றது.
மிக முதன்மையாக, “குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம்” (Significant Market Power) தோன்றுவதையோ அல்லது தவறாகப் பயன்படுத்தப் படுவதையோ தடுக்க ஆணைக்குழுத் தலையிட முடியும். இது சந்தையில் புதிய கண்டுபிடிப்புகளைத் தடுக்கும் போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னமே கண்டறிய உதவும்.
திருத்தச் சட்டத்தின் பிரிவு 6A இன் அறிமுகமானது; கட்டண ஒழுங்குமுறைக்கு ஒரு வெளிப்படையான, அறிவியல் அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்குகின்றது. கட்டணங்கள் பக்கச்சார்பு அற்றதாகவும் செலவை அடிப் படையாகக் கொண்டதாகவும் (cost-oriented) இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
மானியங்கள் (subsidies) பொதுவாக அகற்றப்படும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டணத் திட்டம் இன்றி சேவையை வழங்குவது, பத்து மில்லியன் ரூபா வரை தண்டம் விதிக்கப் படக்கூடிய குற்றமாகும்.
திருத்தச் சட்டத்தின் பிரிவு 10A ஆனது; நுகர்வோர் விருப்பத்தை அதிகரிக்கும் வகையில் வானொலி அலைக்கற்றைகள் மற்றும் தொலைபேசி எண்கள் முதலிய வரையறுக்கப்பட்ட தேசிய வளங்களின் மேலாண்மையை வலுப் படுத்துகின்றது.
பன்னாட்டுத் தொலைத் தொடர்பு சங்கத்தின் (ITU) வழி காட்டல்களுக்கு அமைய; அலைக் கற்றைகளை ஒதுக்கவும் எண் மேலாண்மைத் திட்டங்களை நிருவகிக்கவும் ஆணைக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இது நுகர்வோர் தங்களது தொலைபேசி எண்ணை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றிக்கொள்ளும் “எண் மாற்றத் தன்மை” (Number Portability) வசதியை அறிமுகப் படுத்த வழிவகுக்கும்.
திருத்தச் சட்டத்தின் பிரிவுகள் 35A, 35B இன் படி; வளங்களின் விரயத்தைக் குறைப்பதற்கு ஆக, உட்கட்டமைப்புப் பகிர்வை ஆணைக்குழு கட்டாயப் படுத்த முடியும். ஒரு சேவை வழங்குநர் தனது கோபுரங்கள் அல்லது உட்கட்டமைப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதை ஆணைக்குழு உறுதிப் படுத்தும்.
மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்கான சமூகக் கொள்கை நோக்கங்களையும் ஆணைக்குழு முன்னெடுக்கும்.
இலங்கையின் அமைவிட நிலையைக் கருத்தில் கொண்டு, கடலடித் தந்தி வடங்களைப் பாதுகாக்க வலுவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதற்காகத் தேசிய கடலடித் தந்தி வடப் பாதுகாப்புக் குழு நிறுவப்படும். கடலடித் தந்தி வடங்களுக்குச் சேதம் விளைவிப்பவர்களுக்கு 100 மில்லியன் ரூபா வரைத் தண்டம் அல்லது பத்து ஆண்டுகள் வரைச் சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.
இங்கு திருத்தச் சட்டத்தின் புதிய கூறுகளை 1991 ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டத்துடன் விரிவான ஒப்பீடு செய்து பார்ப்போமானால்;
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் எண் கொண்ட சட்டத்தில் இருந்து திருத்தச் சட்டத்திற்கு மாறுவது என்பது; இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையை ஒரு நிருவாகக் கட்டுப் பாட்டில் இருந்து சந்தை உந்துதல் மாதிரியாக மாற்றுவதைக் குறிக்கின்றது.
முதன்மைச் சட்டத்தில் ஒழுங்குமுறை அமைப்பு “அதிகார சபை” (Authority) என்று அழைக்கப் பட்டது.இது பெரும்பாலும் நிருவாகக் கட்டுப் பாட்டில் கவனம் செலுத்தியது.
திருத்தச் சட்டம் “ஆணைக்குழுவை” (Commission) ஒரு கூட்டு அமைப்பாக வலுப் படுத்துகின்றது.மேலும் அதற்குத் தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமூக அதிகாரங்களையும் வழங்குகின்றது.
முதன்மைச் சட்டம் ஆனது; சேவை இயக்குநர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியது. திருத்தச் சட்டம் ஆனது; இயக்குநர்கள் மீது மட்டும் அன்றி உட்கட்டமைப்பு வழங்குநர்கள் மீதும் கவனம் செலுத்துகின்றது.
முதன்மைச் சட்டம் ஆனது; தொலைத்தொடர்பு ஆணைக்குழுவை நிருவாகக் கடமைகளை ஆற்றும் நிறுவனமாக வைத்திருந்தது. புதிய திருத்தச் சட்டம் ஆனது; ஆணைக்குழுவை சந்தை பகுப்பாய்வு மற்றும் கணிசமான சந்தை அதிகாரம் (SMP) கொண்ட மேற்பார்வை அமைப்பாக மாற்றுகின்றது.
முதன்மைச் சட்டம் ஆனது; அமைச்சரின் ஆலோசனையோடு கட்டணங்களை நிருணயம் செய்தது. திருத்தச் சட்டம் ஆனது; சட்ட ரீதியான பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டணங்களை நிருணயம் செய்யும் நிலைக்கு மாற்றுகின்றது.
முதன்மைச் சட்டத்தின் படி; தண்டங்கள் பழமை ஆனவை மற்றும் பெரிய நிறுவனங்களைத் தடுக்கும் திறன் அற்றவை ஆகக் காணப் பட்டன. எடுத்துக் காட்டாக, உரிமம் இன்றி இயங்குவதற்கான தண்டம் வெறும் 10,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை தண்டம் விதிக்க முதன்மைச் சட்டம் ஒப்புதல் வழங்கியது. எனினும் திருத்தச் சட்டம் ஆனது; 10 மில்லியன் ரூபா முதல் 100 மில்லியன் ரூபா வரை நிருவாக தண்டம் விதிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கிறது.
முதன்மைச் சட்டம் ஆனது; நுகர்வோர் உரிமைகளுக்குப் பொதுவான பாதுகாப்பு வழங்கியது. திருத்தச் சட்டம் ஆனது; எண் மாற்றத் தன்மை மற்றும் தரக் கண்காணிப்பு களையும் வழங்குகின்றது.
திருத்தச் சட்டத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்த பொழுதிலும், குடிசார் சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து விமர்சனங்களையும் திருத்தச் சட்டம் எதிர் கொண்டுள்ளது.எடுத்துக்காட்டாக;
ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளராக இருப்பது, ஆணைக்குழுவின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இது ஆணைக்குழு ஒரு சுதந்திரமான நடுவராகச் செயல்படாமல் அரசின் ஓர் உறுப்பாகச் செயற்பட வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிடப் பட்டது.
மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த முதலீட்டில் உருவாக்கிய உட்கட்டமைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவது; அரசியல் அமைப்பின் 14(1)(g) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ள தொழில் புரியும் சுதந்திரத்தையும் சொத்து உரிமையையும் மீறுவதாக அமையும் என்று சில நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
தொலைத்தொடர்பு திருத்தச் சட்டத்தின் விரிவாக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் இணைய பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) ஆகிய இரண்டும் இணைந்து இணையத்தில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தப் பயன் படுத்தப் படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.
விமர்சகர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டத்தின் நோக்கங்களை அடைவதற்கும் பின்வரும் பரிந்துரைகள் நான் முன்வைக்கின்றேன்:
1. ஆணைக்குழுவின் சுதந்திரத்தை உறுதி செய்தல்: ஆணைக் குழுவின் தலைவர் ஓர் அமைச்சின் செயலாளராக இருக்கக் கூடாது. அதற்கு மாற்றாக, அரசியல் அமைப்புச் சபையினால் நியமிக்கப்படும் சுதந்திரமான தொழில்சார் வல்லுநரைக் கொண்டதாக ஆணைக்குழு அமைய வேண்டும்.
2. தெளிவான நடைமுறை விதிகளை உருவாக்குதல்: ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தன்னிச்சை ஆகப் பயன் படுத்தப் படுவதைத் தடுக்க; குறிப்பிட்ட சந்தை அதிகாரம் மற்றும் உட்கட்டமைப்புப் பகிர்வு குறித்த தெளிவான வழிகாட்டல்களை (Codes of Practice) உருவாக்க வேண்டும்.
3. மேன்முறையீட்டு பொறிமுறையை வலுப்படுத்துதல்: ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக விரைவான தீர்வுகளைப் பெற ஒரு சிறப்புத் “தொலைத் தொடர்புத் தீர்ப் பாயத்தை” (Telecommunications Tribunal) நிறுவுவது பயனுள்ளதாக இருக்கும்.
4. நுகர்வோர் விழிப்புணர்வு: எண் மாற்றத் தன்மை முதலிய புதிய வசதிகள் குறித்து மக்களுக்குத் தெளிவான விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இன்று நாம் விவாதிக்கும் இந்தத் தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமானது; இலங்கையின் எண்மியப் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கி நகர்த்துவதற்கு ஆன ஓர் அடித் தளமாகும்.
1991 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பழமையான சட்டத்தை வைத்துக் கொண்டு 2030 ஆம் ஆண்டின் எண்மியப் பொருளாதார அறைகூவல்களை அரசால் எதிர்கொள்ள முடியாது.
இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் அரசு உட்கட்டமைப்பு வழங்குநர்களை முறைப் படுத்துகின்றது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை நாட்டுக்கு ஈர்க்க முடியும்.
பிரிவு 6A இன் கீழ் கட்டணங்கள் அறிவியல் அடிப்படையில் நிருணயிக்கப்படும். இது நுகர்வோரை அதிகப் படியான கட்டணங்களில் இருந்து பாதுகாக்கும். ” எண் மாற்றத் தன்மை” (Number Portability) ஊடாக நுகர்வோர் தமக்குப் பிடித்தமான சேவை வழங்குநரை, எண்ணை மாற்றாமலேயே தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப் படுகின்றது.
அதே வேளையில், முன்வைக்கப் படும் விமர்சனங்களையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஆணைக்குழுவின் சுதந்திரம் மற்றும் சொத்து உரிமைகள் குறித்து எழுப்பப் பட்டுள்ள கவலைகளை அரசு புறக்கணிக்க கூடாது. இந்த அதிகாரங்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுக்க முறையான வழிகாட்டல் களையும் வெளிப் படையான நடைமுறைகளையும் அரசு பின்பற்ற வேண்டும்.
முடிவாக, ஒரு புதிய, போட்டித்தன்மை கொண்ட மற்றும் பாதுகாப்பான தொலைத் தொடர்புத் துறையை உருவாக்குவதன் மூலமே இலங்கை ஒரு மண்டலத் தகவல் தொடர்பு நடுவமாக மாற முடியும்.
இந்தத் திருத்தச் சட்டத்தின் வெற்றி என்பது; அதன் நடைமுறைப் படுத்தலிலேயே தங்கியுள்ளது. ஆணைக்குழுவின் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு, சந்தைப் போட்டியை நடுநிலையோடு கையாளுதல் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவையே வரும் பதிற்றாண்டுகளில் இலங்கையின் எண்மிய மாற்றத்தை முடிவு செய்யும் எனக் கூறிக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன்.


